Monday 2 April 2007

[Tamil] Liou Chen Kuang - DAP's Candidate For N.8 Machap By-Election

சனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு.லிம்.குவான் எங்,
2007-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கை

மாச்சாப் இடைத்தேர்தல் சனநாயக செயல்கட்சி சார்பில் போட்டியிடும் லியோவ் சென் குவாங் திறமை, நேர்மை, உண்மை ஆகியவற்றுடன் நட்பு முறையில் மாச்சாப் தொகுதி மக்களுக்கு என்றும் தொண்டு செய்யும் ஆர்வம் கொண்டவர்.

Click here to read it on PDF Format

2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் நடைபெறவிருக்கும் மாச்சாப் இடைத்தேர்தலில், சனநாயக செயல்கட்சியின் சார்பில் போட்டியிட, 33 வயதுடைய தோழர் லியோவ் சென் குவாங் பொருத்தமான வேட்பாளர் என கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்திருக்கிறது.

திரு.லியோவ், வாணிகத் துறையில் சிறந்து விளங்கும் ஓர் இளைஞர். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு. மாச்சாப் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிய ஆர்வம் கொண்டிருக்கும் திரு. திரு.லியோவ் ஆற்றல் மிக்கவர், நேர்மையானவர், நட்புறவு குணங்களைக் கொண்டவர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மலேசிய சீனர் சங்க மலாக்கா மாநிலத் தலைவர் காலஞ்சென்ற டத்தோ போ ஆ தியாம்–மிடம் திரு.லியோவ் தோல்வி அடைந்தார் எனினும், மாச்சாப் தொகுதி மக்களின் பிரச்சினைகளைக் கேட்கவும், தீர்வு காணவும் தொடர்ந்து சேவையாற்றி வந்திருக்கிறார். கம்போங் பெர்மாய் மாச்சாப் உம்போ, கம்போங் மாச்சாப் பாரு புதுக் கிராமம் ஆகிய பகுதிகளில் பிரச்சினைகள் அவருக்குத் தெரிந்திருக்கின்ற காரணத்தால் அப்பகுதி மக்களிடத்திலே அவருக்கு செல்வாக்கு உண்டு. இடைத்தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும் திரு லியோவ், மாச்சாப் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவார் என மலாக்கா மாநில சனநாயக செயல் கட்சி கோடிகாட்டியுள்ளது.

மாச்சாப் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இந்த வணிகர், மாச்சாப் மக்களுடன் இணைந்து செயல்படக்கூடியவர். மாச்சாப் தொகுதியின் பிரச்சினைகளை கவனிக்க, சட்டமன்றத்தில் உங்கள் நம்பிக்கைக் குரலாகச் செயல்பட, அச்சமின்றி அநியாயங்களை எதிர்த்து நின்று வாதிட திரு. லியோவ் அவர்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பினைக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

“மாச்சாப் சனநாயகம்” என்னும் முழக்கம்தான் மாச்சாப் இடைத்தேர்தலில், சனநாயகக் கட்சியின் கொள்கைக் குரலாக ஒலிக்கவிருப்பது.

மலேசியாவில் சனநாயகம் காப்பாற்றப்படவேண்டிய முக்கியத்துவத்தை மாச்சாப் மக்கள் உணரவேண்டும் என்னும் நோக்கத்தில்தான் “மாச்சாப் சனநாயகம்” என்னும் முழக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் வழி சனநாயக ஆட்சியை மக்கள் அமைக்கவேண்டும். இடர்பாடு இல்லாத, நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். சனநாயகம் என்பது ஆரோக்கியமான முறையில் செயல்படவேண்டுமெனில்: -

அ) மக்களை பாதிக்கும் முடிவுகளில் மக்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்ளப்படவேண்டும்.

ஆ) அரசியல் அமுலாக்கங்களிலும் முடிவுகள் எடுக்கப்படுவதிலும் மக்களின் பங்கேற்பு இருந்திடவேண்டும்.

இ) வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் எடுக்கப்படும் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களுக்குச் சொல்லவேண்டும்.

மக்கள் பணம் விரயம்

கம்போங் பெர்மாய் மாச்சாப் உம்போ என்னுமிடத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு பதிலாக, 220 அடி உயரத்தில் 400,000-00 வெள்ளி செலவில் புதிய கோபுரம் அமைக்கப்படும் என்று மலாக்கா முதலமைச்சர் டத்தோ முகமது அலி ருச்தாம் கூறுகிறார். ஆரோக்கியமற்ற அரசியலுக்கு இது ஏற்றதல்ல என்பதற்கு இந்த அறிவிப்பு ஓர் எடுத்துக்காட்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கம்போங் பெர்மாய் மாச்சாப் உம்போ பகுதி மக்களை கலந்தாலோசிக்காமல் தொலைத் தொடர்புக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. முடிவெடுக்கும் காரியத்தில் மாச்சாப் மக்கள் பங்கு பெறவில்லை. அக்கம்பத்து மக்களின் கவலையும் அச்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. உடல் ஆரோக்கியம் பாதிப்படையும் என்று அச்சம் கொண்ட மக்கள், சீனத் தொடக்கப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட கோபுரம் குறித்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கலந்து பேசுதல், முடிவெடுப்பதில் பங்கேற்பு, முடிவுகளினால் ஏற்படும் பலன்களை அல்லது பாதிப்புகளை மக்களிடம் சொல்லவேண்டும் என்னும் மூன்று முக்கிய சனநாயகக் கோட்பாடுகள் அப்போது கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்காது – புதிய கோபுரம் கட்ட பணம் விரயமாக்கப்படாது. மக்கள் விருப்பம் நிறைவேறுவதற்கு முன் வாக்குகளை வேட்டையாடிச் சேர்ப்பதில் அரசாங்கம் அவசரம் காட்டுகிறது.

மாச்சாப் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற ச.செ.க. கடுமையாகப் போராடும். நீங்களும் கடந்த 2 ஆண்டுகளாக் காத்திருந்தீர்கள். இப்போது இடைத் தேர்தல் வந்துவிட்டது.

ஆளுங்கட்சியின் அடாவடித்தனங்களைத் தட்டிக்கேட்கவும், அதட்டிக் கேட்கவும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லாது போனதுதான் இதற்கெல்லாம் காரணம். மொத்த கம்பத்து மக்களின் கவலையும் மறுப்பும் மதிக்கப்படாமல், மாநில அரசாங்கம் தன்னிச்சையாக, பிடிவாதமாக தொலைத்தொடர்புக் கோபுரத்தைக் கட்டியது.

ஆகவே, நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது:
ஆளுங்கட்சி இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுமானால், மக்களின் மனக்குறைக்கு மதிப்பளிக்கவேண்டிய கட்டாயம் பாரிசான் கட்சிக்கு இல்லாது போய்விடும். தொடர்ந்து அதிகாரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி மக்களின் விருப்பத்தைப் புறக்கணிப்பார்கள்.

அரசாங்கத்தின் அரக்கத்தனம்

“கொடூரமான புலியைக் காட்டிலும் பொல்லாதது, அரக்கத்தனமான அரசாங்கம்” என்பது சீன அறிஞர் ஒருவரின் பொன்மொழி.

அரசாங்கத்தின் அரக்கத்தனங்களில் சில இதோ:

அ) ஒளிவு மறைவற்ற அரசாங்கங்கள் குறித்து ஆய்வு நடத்தும் அனைத்துலக நிறுவனம் வெளியிட்ட புள்ளி விபரப்படி, உலகின் ஊழல் அரசாங்கப் பட்டியலில் 2003-ஆம் ஆண்டு
33-வது இடத்தில் இருந்த மலேசியா, 2006-ஆம் ஆண்டில் 44-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆ) மலேசிய ஊழல் ஒழிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மீதே, ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் – பாலியல் குற்றம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5.5 மில்லியன் வெள்ளி ஊழல் முறையீடு குறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சர் முகமது சொகாரி பகரோம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இரகசியக் குண்டர் சங்கத்தைச் சேர்ந்த 3 பெரும் கில்லாடிகளை விடுதலை செய்ய பேரம் பேசப்பட்டு, 5.5 மில்லியன் வெள்ளி கையூட்டாக வாங்கியிருக்கிறார் என்று உள்நாட்டுப் பாதுகாப்புஅமைச்சின் துணை அமைச்சர் மீது முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட மூவரில் ஒருவர், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவரின் தம்பி என்றும் கூறப்படுகிறது.

இ) தென்கிழக்காசிய நாடுகளில், மலேசியாவில் மாத்திரம், செல்வம் இருப்போருக்கும் – இல்லாதோருக்கும் இடையிலான வருமான இடைவெளி மிக மோசமாக விரிவடைந்து வருகிறது. 1990-ஆம் ஆண்டு 40 விழுக்காடு மலேசிய மக்கள் 14.5 விழுக்காட்டிற்குள் இருந்தனர். ஆனால் 2004-ஆம் ஆண்டு 13.5 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. அதே வேளை, 20 விழுக்காடு மக்களின் வருமான விகிதம் 1990-ல் 50 விழுக்காடாக இருந்தது. 2004-ஆம் ஆண்டில் அந்த விகிதம் 51.29 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

ஈ) இந்த அரசாங்கம் பிடிவாதமாக, புதிய பொருதாரக் கொள்கையைக் கடைபிடித்துவருகிறது. ஒதுக்கீடு, உறவினர்களுக்கு உதவிடும் முதலாளித்துவம் போன்ற உதவாக்கரை அடிப்படையில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. உலகின் மற்ற பகுதிகளில் போட்டி, திறமை, வெளிப்படையிலான கொள்கை, செய்கின்ற செயலுக்கு மக்களிடத்தில் காரணம் சொல்லும் போக்கு ஆகியவற்றின் அடிப்படை பின்பற்றப்படுகிறது.

எங்கும் எதிலும் ஊழல்

உ) சீன, தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டுக்கு நிதி கொடுப்பதில் பாரபட்சக் காட்டுதல், 3,000 வெள்ளிக்குரிய பழுது பார்க்கும் வேலைக்கு 30,000 வெள்ளி வாங்கும் ஒப்பந்தக்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.

ஊ) நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவு 27 பில்லியனாக இருக்கையில், அரசாங்கத்தின் சலுகை பெறும் நிறுவனங்களுக்கு பாரிசான் அரசாங்கம் தருகின்ற உதவித்தொகை 62 பில்லியன் வெள்ளியாகும்.

எ) 2000-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் நாள் முதல், மலாக்கா முதலமைச்சர் டத்தோ முகமது அலி ருசுதாம், தென்பகுதி மருந்தக நிதியாக வசூலித்த தொகை 908,244.33 வெள்ளியாகும். இது ஏழை நோயாளிகள் உதவிக்காக வசூலிக்கப்பட்டது. ஆனால், இத்தொகையில் பெரும்பகுதி டத்தோக்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பெற்ற சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டத்தோ முகமது அலி இன்னமும் பதில் சொல்ல மறுத்து வருகிறார்.

ஏ) 2005-ஆம் ஆண்டு பெட்ரோனாச் பெற்ற 70 பில்லியன் இலாபத் தொகையை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள நம்முடைய அரசாங்கம் மறுத்துவருகிறது. அதே வேளை, ஒரு சொட்டு எண்ணெய் கூட பெற்றிராத சிங்கப்பூர் அரசாங்கம் தம்முடைய இலாபத் தொகையினை அந்நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இந்த நிலையில் 2006-ஆம் ஆண்டு 30 காசு கூட்டிய பெட்ரோல் விலையை குறைக்க அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால் உலகச் சந்தையில் பெட்ரோல் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61 அமெரிக்க வெள்ளியாகக் குறைந்திருக்கிறது.

ஐ) ஆர்.எச்.பி. எனப்படும் தனியார் வங்கியை வாங்க, ஊழியர் சேமநிதி வாரியம் 11.9 பில்லியன் மலேசிய வெள்ளியை ரொக்கமாகச் செலவழித்திருக்கிறது. இது நம்முடைய மக்களின் பணம். இதில், ஏற்கெனவே செலவழித்துள்ள 2.3 பில்லியன் வெள்ளியையும் சேர்த்தால், மொத்த செலவு 14.2 பில்லியன் ஆகும். இந்தத் தொகை மொத்த முதலீட்டுத் தொகையான 65 பில்லியன் வெள்ளியில் 22 விழுக்காடாகும். ஏற்கெனவே இருக்கும் நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தைப் பார்த்தால், ஊழியர் சேம நிதி வாரியம் எந்த அளவு மோசமான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது என்பது தெரியும். குறிப்பாக வாங்கிய கடனைத் திருப்பித் தராதவர் விகிதம் வாணிக வங்கிகளில் 4 – 5 விழுக்காடு, ஆனால் ஊழியர் சேமநிதி நிர்வாகம் செய்யும் “மலேசிய பில்டிங் சொசைட்டி பெர்காட்” நிறுவனத்தில் கடன் கொடுக்காதவர் விகிதம் 2002-ஆம் ஆண்டில் 64 விழுக்காடு. 2005-ஆம் ஆண்டில் 34 விழுக்காடு. இந்த நிலையில்தான் ஆர்.எச்.பி. என்னும் வாணிக வங்கியை வாங்கி நிர்வகிக்க ஊழியர் சேமநிதி வாரியம் விரும்புகிறது.

சர்வாதிகார நாடுகளில், மக்களுடன் ஆலோசனை நடத்துவது, முடிவெடுப்பதில் மக்களைப் பங்கு பெறவைப்பது, மக்களுக்கு பதில் சொல்வது போன்ற மூன்று முக்கிய அம்சங்கள் இருக்காது. பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் காரியங்களுக்கு சுயநலம் கொண்ட சிலர்தான் முடிவெடுப்பார்கள். சுயேச்சையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படாத தேர்தல்களில் ஒரு கட்சி அரசாங்கம்தான் நீடிக்கும். ஒரு கட்சி அரசாங்கம்தான் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.

தேர்தல் ஆணையம், பாரபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்தத் தவறிவிட்டது. ஆளுங்கட்சியினரால் மேற்கொள்ளப்படும் தேர்தல் முறைகேடுகள் மறைக்கப்படுகின்றன. அதே வேளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நியாயமற்ற, பாரபட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வார இறுதியில் தேர்தலை நடத்த மறுக்கும் தேர்தல் ஆணையத்தின் போக்கு ச.செ.க.வுக்குப் பாதகமானதாகும். ச.செ.க.-வுக்கு வாக்குப் போடக்கூடிய பெரும்பான்மையானோர் வாக்காளர் எண்ணிக்கையில் 25 விழுக்காடாக இருக்கும் 2,410 பேர் மாச்சாப் தொகுதிக்கு வெளியே வேலை செய்கிறார்கள். வார நாளில் அதாவது வேலை நாளில் வாக்குப் போட வருவது அவர்களுக்குச் சிரமம்.

ச.செ.க.வெற்றி உங்கள் கையில்

இதற்கிடையில் டத்தோ முகமது அலி ருச்தாம் திமிரான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் பாரிசின் வேட்பாளர் டத்தோ போ பெற்ற 4,562 வாக்குகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இந்த முறை வெற்றி பெறப்போவதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல, சனநாயக செயல்கட்சி தனது வைப்புத் தொகையை இழக்கும் என்றும் கூறுகிறார். ச.செ.க.வைத் தோற்கடிக்கும் அவரது கனவு பலிக்குமானால், அது சனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. “தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்” நிலைபெற்றுவிடும். அரசாங்க அதிகாரத்தை அப்பட்டமாக, முறைகேடாக பயன்படுத்தும் பாரிசான் நேசனல் கட்சி தோற்கடிக்கப்படவேண்டியது மிக அவசியம். அப்படிச் செய்வதன் மூலம் சனநாயகம் காப்பாற்றப்படுவதோடு ச.செ.க. மேற்கொண்டிருக்கும் “அரசாங்கத்தைக் கண்காணிக்கும்” பணி வலுவடையும். அதன் மூலம் இந்த நாட்டை உண்மையாக ஆளுகின்றவர்கள் “மலேசிய மக்கள்தாம்” என்பது உறுதிபடுத்தப்படும்.

இனம், சமயம், என்ற ரீதியில் நாம் பிரிந்திருக்காமல் உண்மையான மலேசியர்களாக வாழவேண்டும். நம்முடைய நலனைக் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கும் மனிதர்களை நாம் எதிர்கொள்ளவேண்டும். ஒளிவு மறைவு அற்ற, உண்மையான, திறமையான தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். இதன் மூலமே ஒன்றுபட்ட மலேசிய சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். அல்லது திருப்பத்தை ஏற்படுத்தமுடியும். மலேசிய நாடு நம்முடையது, நம்முடைய எதிர்கால இலக்கு அனைவரும் விரும்பக்கூடியது. இந்த நாடு சாமான்ய மக்களான நமக்குச் சொந்தமானது என்ற உணர்வை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வோம். அங்கே சமத்துவமான அரசியல், சமவாய்ப்புக் கொடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் இருக்கும். அதே வேளை, சமூக நியாயங்களும் உறுதிப்படுத்தப்படும்.

“மாச்சாப் சனநாயகம்” வாழ்க!

இப்படிக்கு

லிம் குவான் எங்

1 comment:

BMahendran said...

its a good move to have this in tamil language as well.
good luck!